Tuesday 26 April 2016

பாமதி கவிதைகள் - 26 -


தாயின் கருவறை விட்டு
வெளியேறிய போது
நீர்க்குமிழியைப் போல
நிறமற்றுத் தானிருந்தேன்.
பிரபஞ்ச வெளிதனில்
வந்த பின்பே
நஞ்சும் பாலும் கலந்த
திரவகமாய்
கலந்து திரிகிறேன்

photo by Edgar Keller

பாமதி கவிதைகள் - 25 -


திசை தொலைத்த படகு
ஒன்று கடலுக்குள்
தள்ளாடி நின்றது.
வசந்த காலம் இனி வராது
நீ எந்தத் திசை நோக்கி
நகர்ந்தாலும்
ஒரு தேசத்தைச் சென்றடைவாய்
அங்கே நிலமிருக்கும்
பறவைகள் பறக்கும்
இரவு நேரங்களில் 
நட்சத்திரங்கள் மிளிரும்....
இப்படி எல்லாமுமேஇருக்கும்
நீ மட்டும் 
தனியாகவே இருப்பாய்
என்று ஒரு பறவை
சொல்லிப் பறந்தது.

காலங்கள் கடந்து போகிறது....
 படகு தள்ளாடி
ஏதோ திசையில் அசைந்து
போகிறது.....
ஆனால் அந்தப் பறவை மட்டும் ஏனோ
அந்தப் படகுடன் சேர்ந்தே 
பறக்கிறது.....

Photo by Ching Yang Tung



பாமதி கவிதைகள் - 24 -


கனவு முட்டை
ஒளித்து வைத்து
திரிகிறேன்.
உடைந்து விழுந்தால்
பறவைகள் பறந்து விடும்
வெளிச்சம் இருண்டு விடும்
கனவுகளுக்குள்
கரைந்து நானும்
காணாமல் போவேன்
இந்தப் பிரபஞ்சத்தில்
ஒரு கவிதையாய்
தனித்தே.....

பாமதி கவிதைகள் - 23 -


குழந்தைகளின் சிரிப்பில்
அடுத்த கணங்கள்
தொங்கிக் கொண்டு
நிற்பதில்லை.
இந்தக் கணங்கள் மட்டுமே
அங்கே
வாழ்கின்றன.

பாமதி கவிதைகள் - 22 -


நிசப்தமான
இந்த இரவில்
கனிந்து ஒலிக்கின்ற
புல்லாங்குழல் இசையை
தன்னில் கரையாமல்
என்னிடம் காவி வந்து
தந்தது காற்று
சமர்ப்பணமாய்.

பாமதி கவிதைகள் - 21 -


நான் இருளுக்குள்
ஒளிந்திருக்கிறேன்
என்னை
தேடிக்கொண்டே
வருகிறது வெளிச்சம்.


பாமதி கவிதைகள் - 20 -


நிறங்கள் 
எல்லாவற்றையும்
கழுவி விட்டு,
எப்போது நீங்கள்
ஆத்மாவை
நிர்வாணமாக்கப்
போகிறீர்கள்
மனிதர்களே?

பாமதி கவிதைகள் - 19 -


பூனைகளும் புறாவும்
புரிதல் சாத்தியமா?
இடைவெளி
இருக்கட்டும்.
புறாவிற்கு
பாதுகாப்பு!

cats & bird
Photo by Andy Prokh

பாமதி கவிதைகள் - 18 -


பறவை 
பறக்க வேண்டும்
யன்னலைத் திறந்து வை
சிலவேளை மறுபடியும்
திரும்பியும் வரலாம்
யன்னலைத் திறந்தே வை.

photo by Andy Prokh

Monday 25 April 2016

பாமதி கவிதைகள் - 17 -


புத்தர்
எதற்காகக் கடலில்
இறங்கி மூழ்கிப்
போகிறார்?

பாமதி கவிதைகள் - 16 -



நான் வரையும்
ஓவியங்களில்
எப்போதும் நீ இருப்பாய்.....

பாமதி கவிதைகள் - 15 -


( தகிப்பு )

பழுத்த செம்மஞ்சள் இலை
சலசலத்த நதியில் விழ
காற்றின் திசையில் இலை
சேர்ந்தே ஆடி அசைந்து மிதந்து
அதே நீரோடு திசையில்...

விளிம்பில் வடியத் தொடங்கிய
நதியின் நீரோடு வந்த இலை
விழுந்து விடமால் நின்று விட
மனதடையில் இலை
விழுமா....விழாதா....
பட படக்கும் என் இதயம்

மன இருப்பு கொள்ளாமல்
விளிம்பை எட்டிப் பார்க்க
அதிசயம்-
இலை அமைதியாக
ஒரு குழந்தையின் பிஞ்சு கால்கள்
அண்டிக் கொண்டதை போல...

இலை நீரை தன்னிலிருந்து
வடித்துக் கொண்டிருந்தது ஓசை காற்றுடன்.
அது எதையோ புறு புறுத்துக் கொன்டது
அமைதி அக்கணத்தை நிரப்பியது
என்னுள்.

இயற்கை தனக்குள் செய்து கொள்ளும் உடன்படிக்கைகள்
பரிமாற்றங்கள் அலாதியான இயக்கம் தானோ?

சூரிய ஓளிகீற்று
சலசலத்து ஒடும் நீர் மிதும்
பழுத்த மஞ்சள்இலைமிதும்
தவழ்ந்து விளையாடி....
தன்னையும்-என்னையும்
உதவியாக மாற்றி வடிந்த நீரில்
இந்த இலை எத்தனை நாட்கள்
இந்த விளிம்பில் அமர்ந்திருக்கும்?
அல்லது நீரோடு சேர்ந்து
கீழே விழ்ந்து போகுமோ...
எதுவும் நடக்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக புரிந்த
இயற்கையின் பரி பாஷையில்
நேசமிருப்பதாகவே உள்ளது
எனக்கும்-அந்த இலைக்கும்

பாமதி கவிதைகள் - 14 -


நீலம் பூத்த
நீண்ட இரவுகளில்
கனவுகள் கண்களை நனைத்த
போதெல்லாம்
விழித்தெழுதிய வரிகளை
 முகம் அறியாமலேயே
மனம் தொட்டு உணர்ந்த
ஸ்நேகங்களே!

என் இன்றைய நாட்களின்
சுவாசங்களை
உங்களுடன்
சேர்ந்தே
வரைகின்றேன்..

பாமதி கவிதைகள் - 13 -



வானில் நித்தமும்
 பறந்து கொண்டிருக்கும்
அந்தப் பறவையின் சூரிய
இறக்கைகளின்
நிறங்களிலும் அமைப்புகளிலும்
ஏதோ தவறு இருப்பதாக
 மற்றவர்களோடு விமர்சித்துக் கொண்டிருக்கும்
ஒரு மனிதனால்
 அந்த பறவையை எப்படி
உண்மையாய்
நேசிக்க முடியும்.....

சிலநேரம்
இறக்கைகளை கழற்றி
ஏறிந்துவிட்டு
தொலைந்து திரிகின்ற
 சில பறவைகளுக்கு
 பாதுகாப்பு என்று
நம்பிக்கையாய் பொய்யை
கொடுத்து
இருள்  நிரம்பிய
அடைக்கப்பட்ட கூடுகளை
 அவனால்
உருவாக்க கூடியதாக
இருக்கலாம் .

அதுவும்
சில நிபந்தனைகளோடு.

பாமதி கவிதைகள் - 12 -



இறுக
பற்றிக் கொள்கிறேன்
என்றாலும்
உயிர் பறந்தே
போக விரும்புகின்றது.

பாமதி கவிதைகள் - 11 -


என்னுடன் நட்பா?
சரி.. நட்பைப் பற்றி
உனக்கு என்ன தெரியும்
முதலில் அதைச்
சொல்லி விடு..

பாமதி கவிதைகள் - 10 -


கடைசியாக
மிஞ்சி இருக்கும்
காய்ந்து போன
இந்த இலை ஒன்றே
போதும் சிலவரிகளை
எழுதுவதற்கு.
ஏன்எனில் அதையும்
எனக்குள்ளே நான்
உண்மையாகவே
 நேசிக்கின்றேன்.
அது காய்ந்து உதிர்ந்து
காற்றில் கலந்து
காணமல் போகும்வரை
என் ஆத்மாவை
உரசிக் கொண்டே இருக்கும்
என் கவிதைகள் ஊடாக..

பாமதி கவிதைகள் - 9 -



எழுதிக் கொண்டே
 இறந்து கொண்டிருக்கும்
 மனிதன்
இந்த உலகத்திற்காக
எதை விட்டுச் செல்கிறான்..

தன் உன்னதமான எழுத்துகளின்
பிரமாண்டமான  கனவுகளையா!
தன் வாழ்வின் கணப் பொழுதுகளில்
எந்த ஒரு மாற்றங்களையும் ஏற்படுத்தாத நிகழ்வுகளையா!

தன் மெளனத்தின் இதமான சுவாசங்களில்
வெளிவந்து கொண்டிருக்கும்  வெற்றிடங்களையா!

எதுவாக இருப்பினும் மற்றவர்களுக்காக
எதையோ ஒன்றை
விட்டுச் செல்லத்தான்
நினைக்கிறான்.

Photography from Ching Tung Yang

பாமதி கவிதைகள் - 8 -



முன்னங்
கால்களை உதைத்து
சாம்பல் பூத்த
அனலென அலைகளை
உதறி முன் பாய்ந்த
 குளம்புகள் அடியில்
சிதறிய துகள்களானேன்.
 உன் அழகில் இடறி
மையல் கொண்டு
மயக்கமுற்று
மன்டியிட்டு
உன் முன்னால்
முர்ச்சையானேன் .

பாமதி கவிதைகள் - 7 -


முன்பெல்லாம்
வீட்டின் பின்புறத்தில்
பூனை ஒன்று
ஓடித் திரிவதுண்டு......

Photo by: Andy Prokh

பாமதி கவிதைகள் - 6 -



வானத்திற்கும் பூமிக்கும் இடையில்
காற்று
அங்கே நானும் திரிகிறேன்

பழகிப்போன
பாதுகாப்பான இடம்.

வலிகளின் செதில்கள்
உடலில் இருந்து
மயிர்கொட்டியின்முடியாய்
கொட்டுகிறது.

குஷ்ட ரோகியின்
மரணவலியை
உணர்ந்தது போல் நீ
அழுது கொண்டிருக்கிறாய்.

சில காலங்களிற்கு முன்
மணல் காட்டில்
நானும் திரிந்தேன்.

தரதரவென இழுத்து
சிலுவையில் அறைந்தார்கள்.

விடுதலையடைந்தேன்.
எதனுடனும் கலக்காத
அமிலக் கலவையாய்
இன்று
காற்றில் மிதக்கிறேன்.

சில கைகள் என்னை
தேடுகின்றன என்றாலும்
கைகுலுக்க முடியாது.
உருவம் தொலைத்தவள்
நான்
அல்லவா?

கூரிய முட்கள்
பாலைவனத்தில்
காற்றில் அசைகிறது
உடலைக் கிழித்துக் குதறி
நீலக் குருதியை
என்னில் பாய்ச்சி
கோரமான பற்களை
என்னில் பதிக்கலாம்
அதனால்
காற்றில் மிதப்பதுவே
பாதுகாப்பாகக் கருதுகிறேன்.

நிழல் தரும் மரங்களை
நீ கடக்கும் போது
மேலே நின்று
கிளைகளை அசைத்து
பூக்களை உன்மேல்
தூவுகிறேன்.

அது சீழ் வடியும் உன்
காயங்களைக் குணப்படுத்தும்
பாதைகளில் விழுந்து கிடக்கும்
கசப்பான முட்களை மூடி
உன் பாதத்தைக்
காப்பாற்ற முயலும்.

உன் பின்னால்
காற்றில் எழுதிக் கொண்டே
நடந்து வருகிறேன்.

சில வேளை
பயணித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பாதையில் நீ
இறந்து கிடக்கலாம்.

பயணம் முற்றுப் பெறாமல்
இந்த வெளியில் உன் உடல்
உறைந்தும் போகலாம்.

அக்கணம்
இலையுதிர்கால மரத்தில்
தனியாக
இரைந்து கொண்டிருக்கும்
ஒரு காகத்தின் அருகில்
அமர்ந்திருந்து உனக்காக
அழுது கொண்டிருப்பேன்.

நினைவுகள் உள்ள மட்டும்
உறவுகள் இறப்பதில்லை.
உதிர்ந்த கண்ணீர் துளிகளின்
நியாயமான சோகத்தை
பனிக்காலக் காற்றுக் கூட
உறைய வைக்காது என்று
எனக்குத் தெரியும்.

Sunday 24 April 2016

பாமதி கவிதைகள் - 5 -



நிலத்தைத் தோண்டத் தொடங்கினேன்.
ஈசல்கள் போல் மனிதர்கள்
நிலத்திற்குள் இருந்து
வெளிவரத் தொடங்கினார்கள்
அவர்கள் இதயத்தில்
குருதி கசிந்து கொண்டிருந்தது.....
மீண்டும் கிளறக் கிளற
அவர்கள் வந்து கொண்டே
இருந்தார்கள்.
இப்போது நான்
அழத் தொடங்குகிறேன்.
யார் எனக்குச் சொன்னது?
அவர்கள் இறந்த பின்புதான்
புதைக்கப் பட்டார்கள் என்று....
அவர்கள்
மரணிக்கவில்லை.
அதோ அவர்களின் சுவாசம்
என்னில் மோதி
கடந்து போவதை
என்னால் உணர முடிகிறது.

பாமதி கவிதைகள் - 3 -



என் ஆத்மாவின்  இறக்கை ஒன்று
உதிர்ந்து என் மேசைமேல்  இருந்த மை மேல் விழுந்தது 
அது 
எழுதாத சில
கனவுகளை எழுதுவதற்காக
ஈரம்  கசிந்த படி
காத்திருக்கிறது......

கவிதைகள் - 2 -வேரின் ரகசியங்கள்



 பருத்த இந்த மரத்தின் வேரில்
எத்தனையோ காலத்தின் 
ரகசியங்கள்
அனுபவங்கள் காயங்கள்
முதிர்ச்சிகள்
பதிந்து கிடக்கலாம்.
ஆகையால் 
அதனைக் கடக்கும் போது
உங்கள் பாத அணிகளை
சில கணங்களாவது கழற்றி
வைத்து விட்டுச்
செல்லுங்கள் என்று 
மரத்தில் இருந்த பறந்து 
சென்ற 
பறவை ஒன்று 
சொல்லிக் கொண்டே போனது.